ஆன்மிகம்
ஒரு மனிதனின் பண்புகளில் அன்பு, தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவை இருந்தால், அவன்தான் உண்மையில் அழகான இருதயம் உடையவன்.
“மனுஷன் முகத்தைப் பார்ப்பான்...- 1 சாமுவேல் 16:7”
சிலருடைய முகத்தோற்றம் மிகுந்த மலர்ச்சியாகவும், புன்னகை பூக்கள் பூத்துக் குலுங்குவது போலவும் தோன்றும். அவர்கள் யாரிடமும் எப்போதும் எந்த ஒரு விஷயத்தையும், சிரித்து சிரித்துப் பேசுவார்கள். அதைப் பார்க்கும் போது அவர்கள் நம்முடைய இருதயத்தை ஈர்த்து விடுவார்கள். அவர்களின் முக பாவனைகள் யாவும் அன்பையும், கபடமற்ற பணிவையும், மிகுதியாய் பிரகாசிக்கச் செய்யும். ஆயினும் இவர்கள் யாவரும் அன்பில் மிகுந்தவர்களாகவும், கபடமற்ற புறாக்களாகவும் இருப்பார்கள் என்று நம்பி விட்டால் ஏமாற்றங்கள் ஏராளமாக வரும். அவர்களின் இயற்கையான அந்த தோற்றத்திற்கும், இருதயத்தின் தன்மைக்கும் தொடர்பே இல்லாமல்இருக்கும்.
அதே வேளையில் சிலரை பார்த்ததும் அவர்கள் கடும் கோபிகள் போலவும், பெருமை மிக்கவர்கள் போலவும், இரக்கமற்ற இருதயக்காரர்கள் போலவும் தோன்றுவார்கள். அவர்களின் முகத்தில் தேடித் தேடிப் பார்த்தாலும், ஒரு புன்னகையோ, அன்பின் தோற்றங்களையோ பார்க்க முடியாது. ஆயினும் இவர்களில் சிலர் 24 மணி நேர புன்னகை ராஜாக்களை விடவும், சிரித்து சிரித்தே சிந்தை கவருகிறவர்களை விடவும் நல்லவர்களாகவும், அன்பு மிக்கவர்களாகவும், தாழ்மையாளர்களாகவும் இருப்பதுண்டு.
அகத் தோற்றம் முகத்தோற்றத்தில் பிரதிபலிக்கும் என்பது உண்மை. ஆனால் முகத்தோற்றத்தை அகத்தோற்றத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ள இயலாது. மனிதனின் உண்மையான இருதய தோற்றத்தை முக பாவனைகளிலேயே பார்த்து உறுதி படுத்தி விடக்கூடாது. அவனுடைய செயல்கள், குணங்கள், கொள்கைகள், நடத்தைகள், பண்புகள் போன்றவை தான் அவன் உண்மையில் எப்படி இருக்கின்றான் என்பதை விளக்கும்.
எனவேதான் ஏசு கனிகளினால் மரம் இன்னதென்பதை முடிவு செய்யும் ஆலோசனையை நமக்கு கொடுத்தார். ஒரு மனிதனின் உண்மையான முகம் அவனுடைய பண்புகள் தான். அந்த பண்புகளில் அன்பு, தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவை இருந்தால், அவன்தான் உண்மையில் அழகான இருதயம் உடையவன். அநேகர் பிறருடைய முகத்தோற்றங்களாலும், வசீகரமான வார்த்தைகளாலும், எளிதாக வஞ்சிக்கப்பட்டு விடுகின்றனர். ஏனென்றால், அவர்களின் இருதயம் நல்ல பண்புகளை விட, நல்ல சுபாவங்களை வெளிப் புறத்தோற்றத்தையே மேன்மையாக எண்ணி விடுகிறது.
“அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாம். ஆனாலும்
முகத்தின் அழகை அகத்தின் அழகு என்று எண்ணாதே..”