ஆன்மிகம்
நாம் ஒவ்வொருவரும் நமக்கு அடுத்திருப்பவரில் இயேசுவை கண்டுகொள்கிற உள்ளம் பெற்றிடுவோம். நாம் மாறினால் நம் சமூகம் மாறும்.
தவக்காலம் என்பது அருளின் காலம், தர்மத்தின் காலம், அழைப்பின் காலம், மீட்பின் காலம், வேண்டுதலின் காலம், மனமாற்றத்தின் காலம், இவை அனைத்திற்கும் மேலாக இறை-மனித உறவை புதுப்பிக்கும் காலம்.
இத்தகைய தவக்காலத்தில், கொடிய குத்தகைதாரரின் மனநிலையை (மத் 21:33-43) இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. விவசாயிகளின் போராட்டம், மீனவர்களின் போராட்டம், நெடுவாசல் மக்களின் போராட்டம் என்றாகி விட்ட இன்றைய சூழலில், பிறர் நலனில் அக்கறை இல்லாத மனிதர்களுக்கு எதிரான போராட்டம் இது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.
கிறிஸ்து இயேசுவை பின்பற்றுகிற ஒவ்வொரு மனிதரும் இன்றைய நற்செய்தியில் வருகின்ற கொடிய குத்தகைதாரர்களுக்கு எதிராக குரல் கொடுப்பார் என்பது உண்மை. அதேபோன்று இன்றும் நம் சொந்தங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற கொடிய மனிதர்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க அழைக்கப்படுகின்றோம்.
கிறிஸ்து இயேசுவுக்கு நிகழ்ந்த அநீதி போன்று, இன்று எந்த ஒரு மனிதருக்கும் நிகழக்கூடாது. அதனால் தான் உண்மைக்கும், நீதிக்கும், உரிமைக்கும் குரல் கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அன்பு செய்ய, இரக்கம் காட்ட, மன்னித்து வாழ நினைவூட்டும் இந்த தவக்காலம், பிறர் உழைப்பை உறிஞ்சும், பிறர் உரிமையை பறிக்கும், பிறர்நலம் பகைக்கும் கொடியவனாக இருந்திடாதே, கொடியவனை உருவாக்கிடாதே என்று நமக்கு அறிவுறுத்துகிறது.
எனவே இந்த தவக்காலத்தில் சிந்திப்போம். நாம் ஒவ்வொருவரும் நமக்கு அடுத்திருப்பவரில் இயேசுவை கண்டுகொள்கிற உள்ளம் பெற்றிடுவோம். நாம் மாறினால் நம் சமூகம் மாறும்.
அருட்பணி. ஜே.ஜெரால்டு ஸ்டீபன் செல்வா, உதவி பங்குத்தந்தை, திண்டுக்கல்.