ஆன்மிகம்
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பாலகனாய் பிறந்த உலக மீட்பரான இயேசுவை கண் குளிர காண்பது தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் நோக்கம் ஆகும்.
உலக ஆரம்பத்தில் படைக்கப்பட்ட ஆதிமனிதர்களான ஆதாம், ஏவாள் கீழ்ப்படியாமை என்ற பாவம் செய்து இறைவனின் அன்பான அரவணைப்பையும், பாசமான பராமரிப்பையும் இழந்து மேன்மையான வாழ்வு நிலையில் இருந்து வெளியே தள்ளப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது கருணை கண் நோக்கிய கடவுள் அவர்கள் முதல் கொண்டு உலக மக்கள் அனைவரும் சுமந்த பாவங்களை நீக்கி மீட்பு அளிக்க தன் மகனை இவ்வுலகுக்கு அனுப்ப வாக்களித்தார். அவ்வாறு வாக்களிக்கப்பட்ட இறைமகன் இவ்வுலகில் குழந்தையாக பிறந்தார். அந்த இறை குழந்தையின் பிறப்பு நிகழ்ச்சி தான் கிறிஸ்துமஸ்.
இயேசுவின் பிறப்பு வாழ்வு தர வந்த பிறப்பு. வரலாறு படைத்த பிறப்பு. வல்லமையான இறைவன் குழந்தையாய் வடிவமெடுத்த பிறப்பு. கர்த்தருடைய தூதன், மரியாளின் கணவனாகிய யோசேப்பின் சொப்பனத்தில் காணப்பட்டு, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனை பெறுவாள். குமாரனுக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. ஏனெனில் அவர் தனது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை ரட்சிப்பார் என்றான். மேலும் ஏசாயா தீர்க்கத்தரிசி, இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னார். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிக்கிறார் என்று அர்த்தமாம்.
அந்த வாக்குகளின்படியே உலக மக்களை பாவங்களில் இருந்து மீட்டெடுக்க, யூதேயா தேசத்தில் உள்ள பெத்லகேம் ஊரில் கன்னி மரியாளிடத்தில் பாலகனாய் பிறந்தார் இயேசு. அவர் இம்மானுவேலராய் எப்போதும் நம்மோடு இருக்கிறார். வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமல்ல, துன்பங்கள், சோதனைகள், பாடுகள் வரும்போது எல்லாம் கூடவே வந்து தேற்றி பலப்படுத்துகிறார். நீதியின் சூரியனான அவரை உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும்போது நம்மிடம் பாவ இருள் நீங்கி, பரிசுத்தமான ஒளி பிறக்கிறது.
இயேசு குறித்து யோவான் தீர்க்கத்தரிசனமாக கூறுகையில், உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்றார். அந்த வாக்கின்படியே மெய்யான ஒளியான அவரை ஏற்றுக் கொள்ளும்போது நாம் அவருடைய பிள்ளைகள் ஆவோம். அவரோடு மகிழ்ந்து இருப்போம்.