ஆன்மிகம்

குளிர் காலத்தில் கிறிஸ்துமஸ் ஏன்?

Published On 2017-12-25 08:40 IST   |   Update On 2017-12-25 08:40:00 IST
இறைமகன் இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி எழுதிய நற்செய்தியாளர்களின் வார்த்தைகளில், வரலாற்று நோக்கத்தை விடவும் இறையியல் கண்ணோட்டமே அதிகம் மிளிர்கிறது.
இறைமகன் இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி எழுதிய நற்செய்தியாளர்களின் வார்த்தைகளில், வரலாற்று நோக்கத்தை விடவும் இறையியல் கண்ணோட்டமே அதிகம் மிளிர்கிறது. இருப்பினும், நற்செய்திகளில் வரலாற்றுத் தன்மையுடன் கூடிய பல தகவல்கள் உள்ளன என்பது உண்மை.

இயேசு கிறிஸ்து பிறந்த போது, இடையர்கள் வயல்வெளியில் ஆட்டுக்கிடையை காவல் காத்துக் கொண்டிருந்ததாக லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது. பாலஸ்தீன் நாட்டில், கோடை காலத்தில்தான் இடையர்கள் கிடையை காவல் காப்பது வழக்கம். ஆகவே, மார்ச் முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையேதான் இயேசு பிறந்திருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால், இடையர்கள் பற்றிய செய்தி இறையியல் கண்ணோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. திருமுழுக்கு யோவானின் பிறப்பு குறித்து லூக்கா தரும் வரலாற்று தகவலின் பின்னணியிலேயே, கிறிஸ்து பிறப்பு விழா குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவதாக கிறிஸ்தவ அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்களது வார்த்தைகளை இங்கு காண்போம்.

திருமுழுக்கு யோவானின் தந்தையான செக்கரியா, அபியா வகுப்பைச் சேர்ந்தவர் என்ற குறிப்பை லூக்கா தருகிறார். அவர் எருசலேம் கோவிலில் திருப்பணி செய்த காலத்திலேயே, யோவானின் பிறப்பு குறித்த அறிவிப்பை வானதூதர் கபிரியேலிடம் இருந்து பெறுகிறார். அதன்பிறகு, அவரது மனைவி எலிசபெத் கருவுற்று ஐந்து மாதம் பிறர் கண்ணில் படாமல் இருந்ததாக வாசிக்கிறோம்.

தாவீது அரசரின் காலத்தில் இருந்தே, இஸ்ரயேலின் குருக்கள் பன்னிரு வகுப்புகளாக பிரிக்கப்பட்டு திருப்பணி செய்து வந்தனர். இதில் அபியா வகுப்புக்கு எட்டாவது இடம் கிடைத்தது. ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்த யூத குருக்களும் ஆண்டுக்கு இருமுறை திருப்பணி செய்தனர். அதன்படி, ‘யோம் கிப்பூர்’ எனப்படும் ‘பாவக் கழுவாய்’ விழாவையொட்டி செக்கரியா திருப்பணி செய்தார் என்று அறிகிறோம். இந்த விழா, செப்டம்பர் இறுதியில் கொண்டாடப்படுகிறது.

ஆகவே, செப்டம்பர் இறுதியிலேயே எலிசபெத்தின் வயிற்றில் திருமுழுக்கு யோவான் கருவானார். பிறகு, ஆறாம் மாதத்தில் கன்னி மரியாவுக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. அதாவது மார்ச் மாதத்தில், கன்னி மரியா இயேசுவைக் கருத்தாங்கினார். ஒன்பது மாதங்கள் கழித்து இயேசு கிறிஸ்து பிறந்தார். ஆகவே, குளிர் காலமான டிசம்பரில் கிறிஸ்து மஸ் கொண்டாடுவது சரியே என்று கிறிஸ்தவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

டே. ஆக்னல் ஜோஸ்

Similar News