ஆன்மிகம்
மின்னொளியில் ஜொலித்த ஆலயத்தையும், திரண்டிருந்த மக்களையும் படத்தில் காணலாம்.

புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம்

Published On 2017-11-25 09:21 IST   |   Update On 2017-11-25 09:21:00 IST
நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் கோட்டாறு மறை மாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமையில் நேற்று நடந்தது.
குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களுள் முக்கியமானதாகவும், கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும் நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 24-ந்தேதி கொடியேற்றப்பட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டில் புனித சவேரியார் பேராலய திருவிழா, சவேரியார் இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதுபொலிவூட்டப்பட்ட பேராலய அர்ச்சிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவை கொண்டாட முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, கடந்த 18-ந்தேதி பொலிவூட்டப்பட்ட ஆலய அர்ச்சிப்பு விழா நடந்தது. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமைதாங்கி பொலிவூட்டப்பட்ட ஆலயத்தை அர்ச்சிப்பு செய்துவைத்தார்.

இந்தநிலையில், ஆலய திருவிழா கொடியேற்றமானது நேற்று மாலை நடந்தது. விழாவையொட்டி, காலை 6.15 மணிக்கு ராஜாவூர் இறைமக்கள் கலந்துகொண்ட திருப்பலி நடந்தது. தொடர்ந்து, மாலையில் கோட்டாறு தெற்கு-வடக்கு ஊர் பங்கு இறைமக்கள் சார்பில், பேராலய அருட்பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. இதற்கு, கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமைதாங்கி கொடியை ஏற்றிவைத்தார். அவர் தலைமையில் நடந்த ஆடம்பர கூட்டுத்திருப்பலியில் கோட்டாறு வட்டார முதல்வர் மைக்கிள் ஆஞ்சலுஸ், பங்கு அருட்பணியாளர் கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்கு அருட்பணியாளர் சகாய ஆனந்த், பங்கு அருட்பணியளர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மற்றும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதனால் மின்னொளியில் ஜொலித்த ஆலய வளாகம் மக்களால் நிரம்பி வழிந்தது.

விழா வருகிற 4-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில், காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெறும்.

9-ம் நாள் விழாவான வருகிற 2-ந்தேதி மாலை 6.15 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமயில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், இரவு 10.30-க்கு தேர்பவனியும் நடக்கிறது. 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஆயர் நசரேன் சூசை நற்கருணை ஆசீர் வழங்கி மறையுரையாற்றுகிறார். 4-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது.

Similar News