ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: இறை-மனித உறவை சீராக்குவோம்

Published On 2017-03-30 04:15 GMT   |   Update On 2017-03-30 04:15 GMT
தவக்காலம் என்னும் ஓய்வு நேரத்தில் மனங்களை இளைத்து மனித-இறை உறவை சீராக்கி ஒளிரச்செய்வோம். இறைத்துணையை வேண்டி நம் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.
ஆன்மிக வாழ்வு அற்புதமானது. அத்தகைய வாழ்வு நமக்கு பல சிறப்புகளை பெற்றுத்தருகிறது. அதுபோன்ற ஒரு சிறப்பான வாழ்விற்கு தவக்காலம் நமக்கு அடித்தளமிடுகிறது. தவக்காலம் ஒரு ஓய்வு காலம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விடுமுறை விட்டாச்சு, நன்றாக உறங்கலாம் என்று பலர் நினைப்பார்கள். உழைப்பாளர்கள் தங்களின் இடைவேளை நேரத்தில், தாங்கள் பயன்படுத்தும் கருவிகளை கூராக்குவார்கள். அதுபோல இறைவனுக்கும் நமக்குமான உறவை சீராக்க வேண்டும். அதற்கு இந்த தவக்காலம் உதவும்.

வேகமாக சுழலும் மின்விசிறி பார்ப்பதற்கு சுழலாமல் இருப்பதை போன்று தோன்றும். ஆனால் அது வேகமாக சுழன்று கொண்டு தான் இருக்கிறது. அதுபோல நமது பூமியை உள்ளடக்கிய அண்டம் இடைவிடாது இயங்கி கொண்டு இருக்கிறது. வானத்தை பார்த்தால் அனைத்தும் நிலையாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அவை முழுவதும் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன.



இயற்பியலின் கருத்துப்படி ஒவ்வொரு பருப்பொருளுக்கும் ஒரு அதிர்வெண் உண்டு. ஒரே அதிர்வெண் கொண்ட பருப்பொருட்கள் இயைந்து செல்லும் போது ஒத்த அதிர்வு உண்டாகிறது. அதுபோல மனிதருக்கும் ஒரு அதிர்வெண் உண்டு. ஜெபம், தவம், பக்தி, முயற்சி ஆகியவற்றால் நாமும் இறையோடு இணைய முடியும். இதற்கு சில தடைகள் உள்ளன. அந்த தடைகளை கீழ்க்காணும் வழிகளில் தடுக்கலாம்.

நான் பாவி என உணர்வது (1 திமொ 1:15), மனம் திருந்தி மனமாற்றமடைவது (திபா 51), இறைவனிடம் திரும்பி வருவது (லுக் 15:18-19), இறைவனின் இரக்கத்தை அனுபவிப்பது (விப 34:6), மீட்படைவது (எசா 44:22) ஆகியவை தடைகளை வெல்லும் வழிமுறைகள் ஆகும்.

மரங்களை இழைத்தால் பலகைகள் பொலிவு பெறும். அதற்கு ஓய்வு நேரத்தில் கருவிகளை கூர்மை படுத்த வேண்டும். அதுபோல மனங்களை இழைத்தால் மனிதம் ஒளிரும். எனவே தவக்காலம் என்னும் ஓய்வு நேரத்தில் மனங்களை இளைத்து மனித-இறை உறவை சீராக்கி ஒளிரச்செய்வோம். இறைத்துணையை வேண்டி நம் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.

அருட்திரு. ஆ.லியோ ஜோசப், உதவி பங்குத்தந்தை,

கொசவபட்டி.

Similar News