கிறித்தவம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Published On 2022-04-18 03:18 GMT   |   Update On 2022-04-18 03:18 GMT
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கிறிஸ்துவர்கள் கடைப்பிடிக்கின்றனர். அவர் 3-வது நாள் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு கடந்த மார்ச் 2-ந் தேதி தவக்காலம் தொடங்கியது. இதனை முன்னிட்டு உலகம் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மார்ச் 2-ந் தேதி சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது. நெற்றியில் சாம்பல்பூசி கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடர்ந்தனர்.

அன்றில் இருந்து தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கடந்த 10-ந் தேதி குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று வழிப்பட்டனர்.

இதையடுத்து கடந்த 14-ந் தேதி புனித வியாழன், 15-ந் தேதி புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது. தவக்காலத்தின் இறுதி நாளாகவும், இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்ததையும் குறிக்கும் வகையில் இன்று ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இயேசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதையடுத்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கத்தில் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகள் தொடங்கின.

தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ‘‘பாஸ்கா ஒளி’ ’ஏற்றப்பட்டது. கலையரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் இருதயராஜ் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார்.

இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தனர்.

இரவு 12 மணிஅளவில் வாணவேடிக்கை, மின் னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதேப்போல் புகழ்பெற்ற தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்திலும் நள்ளிரவில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பலியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது தொற்று குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஈஸ்டர் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
Tags:    

Similar News