ஆன்மிகம்
ஆரோக்கிய மாதா

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2019-08-30 03:28 GMT   |   Update On 2019-08-30 03:28 GMT
வாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.
தென்னகத்து வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் பால்ராஜ் தலைமையில் திருவிழா கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, இறைவார்த்தை சபை 144-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 19-வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கின்றன. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியையும் மதுரை உயர்மாவட்டம் முதன்மை குரு ஜெயராஜ் நடத்துகிறார். இரவு 7 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.

இதனைத்தொடர்ந்து 9-ந்தேதி காலை 6.30 மணிக்கு கொடியிறக்கமும், நன்றி திருப்பலியும் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்து விழா நிறைவு பெறுகிறது.

இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் ஜோசப், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், எஸ்.வி.டி. உதவி பங்குத்தந்தை யூஜின்டென்சிங், ஆன்மிக குரு அகஸ்டின்காரமல் மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் செய்துள்ளனர்.
Tags:    

Similar News