ஆன்மிகம்
கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழாவில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களை படத்தில் காணலாம்.

புனித சலேத் அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது

Published On 2019-08-06 03:53 GMT   |   Update On 2019-08-06 03:53 GMT
கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 153-வது பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக திருக்கொடி மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைந்தது.

அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர், கம்பத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதனை திரு இருதய ஆண்டவர் ஆலய வட்டார அதிபர் எட்வின் சகாயராஜா, பங்குத்தந்தையர்கள் ஏஞ்சல்ராஜா, அடைக்கலராஜா ஆகியோர் ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இப்ராகிம், ஆலய பங்கு தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் உள்பட கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி புனித சலேத் அன்னை ஆலயத்தில் தினசரி சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான 14-ந் தேதி பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதனை மதுரை பேராயர் அந்தோணிபாப்புசாமி நிகழ்த்துகிறார். அதனைத்தொடர்ந்து புனித சலேத் அன்னையின் மின் அலங்கார தேர்பவனி நகரின் வீதிகள் வழியாக வந்து 15-ந்தேதி அதிகாலை மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைகிறது.

அதனைத்தொடர்ந்து பகல் நேர சப்பரபவனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைகிறது. அங்கு நற்கருணை பெருவிழா மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் எட்வின்சகாயராஜா, பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News