ஆன்மிகம்
வடுகர்பேட்டை புனித ஆரோக்கியமாதா ஆலயத்தில் கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம். (உள்படம்: புனித ஆரோக்கியமாதா.)

புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழா தொடங்கியது

Published On 2018-08-31 03:34 GMT   |   Update On 2018-08-31 03:34 GMT
திருச்சி மாவட்டம், வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கியமாதா ஆலய ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம், வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கியமாதா ஆலயம் வீரமாமுனிவர், புனிதஅருளானந்தர் போன்ற பல முக்கியஸ்தர்கள் பணியாற்றிய 345 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலய திருத்தல ஆண்டு பெருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவில், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி கலந்து கொண்டு மாதா கொடியினை புனிதப்படுத்தி,கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினார்.

பின்னர் நடைபெற்ற கூட்டுபாடல் திருப்பலியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் வடுகர்பேட்டை, ஆரோக்கியபுரம், மாதாபுரம், காமராஜபுரம், கல்லக்குடி, விரியூர் பகுதி மக்கள் கலந்து கொண்டார்கள். இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை தினமும் மாலை நடைபெறும் திருப்பலியில் புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

வருகிற 7-ந் தேதி மாலை ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது. இதில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொள்கிறார்். இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர சப்பர பவனியும் 8-ந் தேதி காலை திருவிழா திருப்பலியும் மாலை 4 மணிக்குதிருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு சப்பர பவனியும் நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அதிபர் அருட்தந்தை தங்கசாமி, உதவி பங்குத்தந்தை நேசமணி, திருச்சிலுவை கன்னியர்கள், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News