ஆன்மிகம்

புங்கனூரில் புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா

Published On 2018-02-12 08:33 IST   |   Update On 2018-02-12 08:37:00 IST
புங்கனூரில் புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து, திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூரில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்ட அங்குள்ள கிறிஸ்தவ சமுதாய மக்களால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முன் தினம் புதிய புனித அந்தோணியார் ஆலயத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து, திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து ஆயர் தலைமையில் பல்வேறு பங்குத்தந்தைகள் கலந்து கொண்ட கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. விழாவில் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு கொறடாவும், டி.டி.வி.தினகரன் அணி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான மனோகரன், எஸ்.ஏ.எஸ். கல்வி நிறுவனத்தின் தாளாளர் செபாஸ்டியன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அலெக்ஸ் தலைமையில் புங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஜார்ஜ், தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் அருள்ராஜ், புங்கனூர் சேசுராஜ், டி.டி.வி.தினகரன் அணி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News