கிரிக்கெட் (Cricket)

இந்தியாவின் சாதனை.. இலங்கையின் சோதனை

Published On 2023-11-03 11:40 IST   |   Update On 2023-11-03 11:40:00 IST
  • இந்திய அணி 357 ரன் குவித்த போதிலும் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.
  • இந்த ஆண்டில் இந்தியா இதுவரை 7 முறை 350 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை 55 ரன்னில் சுருட்டி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதேசமயத்தில் இலங்கை அணி மோசமான சாதனையை நிகழ்த்தி உள்ளது.

இந்திய அணி 357 ரன் குவித்த போதிலும் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. உலகக் கோப்பையில் சதமின்றி எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு சதமின்றி எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோரை பாகிஸ்தான் (2019-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 348 ரன்) பெற்றிருந்தது.

இந்த ஆண்டில் இந்தியா இதுவரை 7 முறை 350 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. ஓராண்டில் அதிக தடவை 350 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள இங்கிலாந்தின் சாதனையை (2019-ம் ஆண்டில் 7 முறை) சமன் செய்திருக்கிறது.

இந்திய அணி 302 ரன் வித்தியாசத்தில் இலங்கையை போட்டுத்தாக்கியது. ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் 2-வது பெரிய வெற்றி இதுவாகும். ஆண்டின் தொடக்கத்தில் இதே இலங்கையை திருவனந்தபுரத்தில் 317 ரன் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது உலக சாதனை வெற்றியாக தொடருகிறது.

இலங்கை அணியில் 5 வீரர்கள் டக்-அவுட் ஆனார்கள். உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் 5 வீரர்கள் ரன்னின்றி வீழ்ந்தது இது 8-வது முறையாகும்.

இந்த ஆட்டத்தில் 55 ரன்னில் அடங்கிய இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது. இதற்கு முன்பு 1975-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 86 ரன்னில் ஆல்-அவுட் ஆனதே இலங்கையின் பரிதாபகரமான ஸ்கோராக இருந்தது. உலகக் கோப்பையில் ஒட்டுமொத்தத்தில் கனடா அணி 36 ரன்னில் சுருண்டதே குறைந்த ஸ்கோராக (2003-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக) நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News