கிரிக்கெட்
null

23 வயதில் எனக்கு நம்பிக்கை கொடுத்தது டான் பிராட்மேனின் அறிவுரைகள்தான் - சச்சின் உருக்கம்

Published On 2023-03-28 10:12 GMT   |   Update On 2023-03-28 10:14 GMT
  • நான் 22-23 வயதில் இருக்கும்பொழுது டான் பிராட்மேன் என்னை அழைத்து அவரது பேட்டிங்கை போன்று இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டார்.
  • 24 வருடங்கள் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும் போது, டான் பிராட்மேன் கொடுத்த அறிவுரை எவ்வளவு முக்கியமானது என உணர வைக்கிறது.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதன்மையானவராக உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நெருங்கிவரும் நிலையில், இன்றளவும் இவரது சாதனையை எவரும் நெருங்க முடியவில்லை.

சச்சின் டெண்டுல்கரின் காலகட்டத்திற்கு முன்பு டான் பிராட்மேன் தலைசிறந்த வீரராக பார்க்கப்பட்டார். சச்சின் டெண்டுல்கரை பலமுறை அழைத்து டான் பிராட்மேன் பேசியுள்ளார். ஆனால் சச்சினின் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையின்போது, தான் பிராட்மேன் அழைத்து கூறிய சில அறிவுரைகள், பல வருடங்கள் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியதாக சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

டான் பிராட்மேன் குறித்த ஆவணப்படம் தயாராகி வருகிறது. அதற்காக டான் பிராட்மென் குறித்த நினைவுகளை சச்சின் பகிர்ந்து கொண்டார். 1990-களின் ஆரம்ப கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் குறித்து தான் பிராட்மேன் கூறியதாவது:

"நான் ஓய்வுபெற்ற பிறகு, எனது ஆட்டத்தை மீண்டும் தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் விளையாடியதை பலமுறை பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட எனது ஆட்டத்தை போன்று இருந்தது. அப்போது எனது மனைவியை அழைத்து பார்க்கச் சொன்னேன். அவரும் அப்படியே இருக்கிறது என்றார். சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கில் அவ்வளவு நேர்த்தி, ஆக்ரோஷம் மற்றும் சிறந்த அணுகுமுறை இருக்கிறது. வைத்த கண் எடுக்காமல் பார்க்க வைக்கிறார்." என்று கூறினார்.

இதனை நினைவுபடுத்தி பேசிய சச்சின் டெண்டுல்கர், "நான் 22-23 வயதில் இருக்கும்பொழுது டான் பிராட்மேன் என்னை அழைத்து அவரது பேட்டிங்கை போன்று இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டார். அதைப்பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. அவர்களது குடும்பத்தினரிடம் விட்டுவிடுகிறேன்.

என்னுடைய ஆரம்பகால கிரிக்கெட்டில் ஜாம்பவான் ஒருவர் இப்படி அழைத்துப் பேசி அறிவுரைகள் கூறியது அடுத்த பல வருடங்களுக்கு கடினமாக உழைக்க வேண்டும். இன்னும் நிறைய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று உணர வைத்தது. மேலும் என்னுடைய கிரிக்கெட்டை அவர்கள் பார்க்கிறார்கள் மற்றும் அதற்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கும் போது எனக்குள் ஒருவிதமான மகிழ்ச்சியும் இருந்தது.

அனைவருக்கும் இதுபோன்று கிடைத்திடாது. 24 வருடங்கள் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும் போது, டான் பிராட்மேன் கொடுத்த அறிவுரை எவ்வளவு முக்கியமானது என உணர வைக்கிறது. பலரும் எனது கிரிக்கெட்டுக்கு உதவினார்கள். அதில் பிராட்மேனுக்கு முக்கிய பங்குண்டு.

என்று சச்சின் டெண்டுல்கர் பேசினார்.

Tags:    

Similar News