கிரிக்கெட்

வங்காளதேசத்துடன் நாளை 2-வது ஒருநாள் போட்டி: வெற்றி நெருக்கடியில் இந்தியா

Published On 2022-12-06 11:16 GMT   |   Update On 2022-12-06 11:16 GMT
  • மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிர்பூர்:

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோற்றால் ஒரு நாள் தொடரை இழந்துவிடும். இதனால் இந்திய அணி வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல் ஒருவரே நிலைத்து நின்று ஆடினார். அதுவும் கடைசிகட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள். இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இதேபோல பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் முக்கியமான கட்டத்தில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இது அணியின் வெற்றியை பாதித்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிட்டன் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு நம்பிக் கையை அதிகரித்துள்ளது.

கேப்டன் லிட்டன் தாஸ், சகீப்-அல்-ஹசன், முஸ்பிகுர் ரகீம், ஹசன் மிராஸ், எபொதத் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

வெற்றி நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News