கிரிக்கெட்

சூப்பர் ஃபார்ம், அடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்: சுப்மன் கில் சொல்வது என்ன?

Update: 2022-11-28 07:31 GMT
  • ரோகித் சர்மா இல்லாததால் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
  • 14 இன்னிங்சில் ஒரு சதம் 4 அரைசதம் விளாசியுள்ளார்.

இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான கில். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவிற்கு அவ்வப்போது ஓய்வு அளிக்கப்படும்போது சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இதுவரை 14 இன்னிங்சில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் விளாசியுள்ளார். சராசரி 60-க்கு மேல் ஆகும்.

நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரின் முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 45 ரன்கள் எடுத்திருந்தார்.

இரண்டு மூன்று முறை மழையால் போட்டி நிறுத்தப்பட்டு இறுதியாக கைவிடப்பட்டது. இப்படி நடப்பதால் வீரர்கள் ஏமாற்றம் அடைவதுடன் எரிச்சலும் அடைவார்கள். ரசிகர்களும் அதேபோல்தான்.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்த அணியில் இடம் பிடிப்பதற்கு அச்சாரம் போட்டிவிடலாம் என நினைத்திருந்தார்.

போட்டி ரத்தான பிறகு, எதிர்காலம் மற்றும் மழை பெய்தால் போட்டியை நடத்த மாற்று ஏற்பாடு குறித்து பேட்டியளித்தார்.

இதுகுறித்து சுப்மன் கில் கூறியதாவது:-

உள்விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாடுவது சற்று கடினம். ஒருவேளை மழை பெய்தால் மைதானத்திற்கு மேல் கூரை அமைக்கலாம். இது எல்லாம் கிரிக்கெட் போர்டு எடுக்க வேண்டிய முடிவு. அடிக்கடி உள்ளே செல்வது, பின்னர் வெளியே வருவது இது இரண்டும் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் எரிச்சலூட்டும்.

ஏராளமான போட்டிகள் மழையால் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து ஒரு நிலைப்பாட்டை நான் எப்படி எடுப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. இது மிகப்பெரிய முடிவு. ஆனால் மேற்கூரை அமைப்பதாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும்.

இந்திய அணியில் நிரந்த இடம், தொடக்க பேட்ஸ்மேன் என்ற முன்னோக்கிய யோசனையை நான் பார்க்கவில்லை. அதிகப்படியான வாய்ப்பை பெறுவதற்கான அனைத்தையும் பெற முயற்சிப்பேன். அதன்பின் அதிக ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்காக மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

முதல் ஒருநாள் போட்டியில் கூட நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அணி நிர்வாக கூட்டத்தில் கூட நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்துதான் பேசப்படும். நிலைத்து நின்ற பேட்ஸ்மேன் இன்னிங்சை பினிஷ் செய்தால், அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்தார்.

Tags:    

Similar News