கிரிக்கெட் (Cricket)

முகமது சமிக்கு வாழ்த்து தெரிவித்த ஆப்கன் ரசிகை- வைரலாகும் டுவிட்

Published On 2023-11-03 15:58 IST   |   Update On 2023-11-03 15:58:00 IST
  • ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும்.
  • 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சமி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இலங்கை - இந்தியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்த போட்டியில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சமி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர்கான் (23 ஆட்டத்தில் 44 விக்கெட்), ஸ்ரீநாத் (34 ஆட்டத்தில் 44 விக்கெட்) ஆகியோரை பின்னுக்கு தள்ளினார். இந்த வரிசையில் 4-வது இடத்தில் பும்ரா (33 விக்கெட்) உள்ளார்.

உலகக் கோப்பையில் முகமது ஷமி ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் மற்றும் அதற்கு மேல் சாய்ப்பது இது 3-வது முறையாகும். உலகக் கோப்பையில் அதிக தடவை 5 விக்கெட் வீழத்திய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை (இவரும் 3 முறை) சமன் செய்தார்.

ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும். இந்தியர்களில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் இவர் தான். ஸ்ரீநாத், ஹர்பஜன்சிங் (தலா 3 முறை) அடுத்த இடத்தில் உள்ளனர்.

பல்வேறு சாதனைகளை படைத்த முகமது சமிக்கு ஆப்கானிஸ்தான் ரசிகை சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மைதானம் அவருக்கு சொந்தமானது. என்ன ஒரு அற்புதமான வீரர் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News