சினிமா

வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலத்தில் இருந்து திருப்பதிக்கு 2½ டன் பூக்கள் அனுப்பி வைப்பு

Published On 2017-01-07 11:42 IST   |   Update On 2017-01-07 12:40:00 IST
வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருப்பதி கோவிலை அலங்காரம் செய்வதற்காக பூக்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சேலத்தில் இயங்கி வரும் திருமலை ஸ்ரீ திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு சிறப்பு உற்சவத்திற்கும் பக்தர்களிடம் இருந்து பூக்கள் பெற்று அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி கோவிலை அலங்காரம் செய்வதற்காக மேரிகோல்டு, துளசி, சாமந்தி, சம்பங்கி, அரளி ஆகிய பூக்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் சங்கர் நகரில் உள்ள வன்னியர்குல சத்திரியர் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பூக்களை இலவசமாக மண்டபத்திற்கு கொண்டு வந்து தொடுத்தனர். பூக்கள் கட்டும் நிகழ்ச்சி மாலை 4 மணி வரை நடந்தது. அதன் பின்னர் 2½ டன் பூக்கள் லாரி மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திருமலை ஸ்ரீ திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News