சினிமா
ரஜினிகாந்த்

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக 14-ந்தேதி ஐதராபாத் செல்லும் ரஜினி - சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2020-12-08 11:02 IST   |   Update On 2020-12-08 11:05:00 IST
‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் வருகிற 14-ந் தேதி ஐதராபாத் செல்ல உள்ள நிலையில், இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 168-வது படமாகும். இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இன்னும் 40 சதவீதம் படப்பிடிப்பு எஞ்சியுள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த வாரம் அறிவித்தார். அதற்கான முறையான அறிவிப்பு வருகிற 31-ந்தேதி வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

எனவே அரசியல் கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தை முடித்து கொடுக்க திட்டமிட்டுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவதையொட்டி ரஜினி பெங்களூர் சென்று தனது அண்ணன் சத்திய நாராயணனிடம் ஆசி பெற்றார். வருகிற 12-ந்தேதி பிறந்த நாளையொட்டி அவர் பெங்களூரிலேயே தங்கி இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று திடீரென்று அவர் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினி சென்னையில் இருந்து வருகிற 14-ந் தேதி தனியார் ஜெட் விமானம் மூலம் ஐதராபாத் செல்கிறார். 15-ந்தேதி முதல் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.



படப்பிடிப்பின் போது ரஜினி மற்றும் நடிகர்- நடிகைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ராமோ ஜிராவ் பிலிம்சிட்டிக்குள் அமைந்துள்ள ஒரு ஓட்டலில் பிரத்தியேகமாக சில தளங்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரஜினியின் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதிக்க பிரத்தியேகமாக டாக்டர் ஒருவரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளர். ‘அண்ணாத்த’ படத்தில் துணை நடிகர்- நடிகைகள் கூட்டமாக பங்கேற்ற காட்சிகள் ஏற்கனவே ஊரடங்குக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்டன. எனவே நடிகர்- நடிகைகளின் தனிப்பட்ட காட்சிகள் மட்டுமே இனி படமாக்கப்பட உள்ளன.

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு காலம் 45 நாட்கள் ஆகும். படப்பிடிப்பு தவிர அதன் பிந்தைய பணிகளுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. எனவே சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Similar News