சினிமா

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ் மீண்டும் பதவி ஏற்பு

Published On 2018-12-14 07:58 GMT   |   Update On 2018-12-14 07:58 GMT
திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் அதனை உறுதிப்படுத்தினார். #Bhagyaraj #WritersAssociation
தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் தங்களது கதைச் சுருக்கம், கதை வசனம், திரைக்கதை ஆகியவற்றை பதிவு செய்வதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம். கடந்த தேர்தலில் இந்த சங்கத்தின் தலைவர் பதவிக்கு இயக்குனர் கே.பாக்யராஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்துக்கு கதை திருட்டு பிரச்சினை எழுந்தது. கள்ள ஓட்டால் பாதிக்கப்படும் ஒருவர் அரசியலுக்குள் நுழைந்து மாற்றங்களை ஏற்படுத்துவது போல் அமைந்த கதையை தான் 10 ஆண்டுகளுக்கு முன்பே சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதாக உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த பாக்யராஜ், வருணுக்கு ஆதரவாக கடிதம் வழங்கினார். இந்த விவகாரம் ஐகோர்ட்டுக்கு போனது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் சமரசம் ஏற்பட்டு சர்கார் படத்தின் டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு முருகதாஸ் இடம் கொடுத்தார். இந்த பிரச்சினையின் போது தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறி பாக்யராஜ் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.



பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க மாட்டோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தலைவர் ஆவேன் என பாக்யராஜ் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.

அவரது சமாதானத்தை ஏற்காத தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மனோஜ் குமார், யார் கண்ணன், விக்ரமன், செல்வமணி உள்ளிட்ட 21 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பாக்யராஜ் தலைவராக இல்லாத சங்கத்தில் தாங்கள் நிர்வாகிகளாக இருக்கமாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

நிர்வாகிகளின் முடிவை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ் தனது முடிவை மாற்றிக்கொண்டார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற கோகோ மாக்கோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, எழுத்தாளர் சங்க விவகாரம் குறித்து பாக்யராஜிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது தான் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை அவர் உறுதி செய்தார். #Bhagyaraj #WritersAssociation

Tags:    

Similar News