சினிமா

தவறாக அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருது: மீண்டும் ஒரு திட்டமிட்ட சொதப்பலா?

Published On 2017-02-27 13:25 IST   |   Update On 2017-02-27 13:25:00 IST
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது லா லா லேண்டிற்கு தவறுதலாக அறிவிக்கப்பட்டது. இதனால் விழா அரங்கில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த துணை நடிகர், அனிமேஷன் படம், இசைத் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு முதலில் அறிவிக்கப்பட்டது. இறுதியாக சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.

அப்போது, சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவித்தவர் ‘லா லா லேண்ட்’ படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வானதாக மேடையில் அறிவித்தார். இதையடுத்து, ‘லா லா லேண்ட்’ படக்குழுவினர் மேடைக்கு வந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, நடுவர் குழுவை சேர்ந்த ஒருவர் திடீரென குறுக்கிட்டு, மைக்கில் பேசிக் கொண்டிருந்தவரை தடுத்து நிறுத்தி சிறந்த படத்திற்கான விருது தவறுதலாக அறிவிக்கப்பட்டு விட்டதாக கூறினார்.

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘மூன் லைட்’ படம்தான் வென்றுள்ளது என்றும் தெரிவித்தார். இதனால் ‘லா லா லேண்ட்’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த அறிவிப்பை ‘மூன் லைட்’ குழுவினர் நம்பவில்லை. ஆனால், நடுவர் குழுவை சேர்ந்தவர், திரும்பவும் இது ஜோக் அல்ல நிஜம் தான் என்று தெரிவித்து, அறிவிப்பு தாளினை பிரித்தும் காட்டினர். பின்னர், ‘மூன் லைட்’ படக்குழுவினர் மேடையில் வந்து தங்களுக்கான விருதை பெற்றுக்கொண்டனர். இதனால் சற்று நேரம் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.



இதேபோல், 2015-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச்க்கு பதிலாக கொலம்பியா நாட்டை சேர்ந்த அரியட்னா குடியர்ரெஸை தவறுதலாக அறிவித்திருந்தார். அரியட்னா குடியர்ரெஸுக்கு கீரிடம் எல்லாம் அணிவித்த பிறகே, இந்த தவறை விழாக்குழுவினர் அறிந்தனர். இதனால், வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே பிரபஞ்ச அழகியாக அரியட்னா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் நடுவர்கள் எவ்வாறு அறிவிப்புகளை தவறுதலாக தெரிவிக்க முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டே நிகழ்த்தப்படுகிறதா? என்ற ஐயமும் எழுகிறது.

Similar News