சினிமா

வாடகை வீடு தொடர்பாக நமீதாவை தொந்தரவு செய்யக்கூடாது: சிவில் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-01-04 15:49 IST   |   Update On 2017-01-04 15:49:00 IST
வாடகை வீடு தொடர்பாக நடிகை நமீதாவை தொந்தரவு செய்யக்கூடாது என வீட்டின் உரிமையாளருக்கு சென்னை சிவில் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
'எங்கள் அண்ணா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா. இவர் சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகேந்திரனுக்கும், நமீதாவுக்கும் வாடகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் நமீதா புகார் செய்தார். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சென்னை 13-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று ஒரு அவசர வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், வீட்டின் உரிமையாளர் தனக்கு பல விதமான தொந்தரவுகளை கொடுக்கிறார். வீட்டை நான் காலி செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செயல்படுகிறார். மேலும் ரவுடிகளை பயன்படுத்தி, என்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்.

எனவே, அமைதியான முறையில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது. என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும்.என்னை ரவுடிகள் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகள் மூலமும் தொந்தரவு செய்ய வீட்டின் உரிமையாளருக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு 13-வது சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘நமீதாவை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு தடை விதித்து’ உத்தரவிட்டார்.

Similar News