சினிமா

திரையரங்குகளில் இனி தேசிய கீதம் கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2016-11-30 12:21 IST   |   Update On 2016-11-30 12:21:00 IST
திரையரங்குகளில் இனி தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்..
நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பாக புகை பிடிப்பதின் தீங்கு குறித்த விழிப்புணர்வு வீடியோவை திரையிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஒவ்வொரு திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேசிய கீதத்தை படம் தொடங்குவதற்கு முன்பாக இசைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடியை காட்டவேண்டும். தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையரங்குக்குள் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில் வணிகரீதியான ஆதாயம் எதுவும் தேடக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இந்த உத்தரவை ஏற்று தேசிய கீதம் இசையமைப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்தபிறகு திரையரங்குகளில் இனி படம் திரையிடப்படுவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்படும்.

Similar News