தரவரிசை
விமர்சனம்

கள்ளன் விமர்சனம்

Published On 2022-03-18 13:59 IST   |   Update On 2022-03-18 13:59:00 IST
சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன், நிகிதா, நமோ நாராயணன், சவுந்தரராஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் கள்ளன் படத்தின் விமர்சனம்.
தேனி அருகே இருக்கும் ஊரில் வசிக்கும் கரு பழனியப்பன், காட்டுக்குள் இருக்கும் மிருகங்களை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வருகிறார். அரசாங்கம் காட்டு விலங்களை வேட்டையாட கூடாது என்று தடை போடுவதால், என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் கரு பழனியப்பன், கள்ள துப்பாக்கிகளை தயார் செய்து விற்கிறார்.

ஒருகட்டத்தில் அது பிரச்சனையாக மாறுவதால், திருட ஆரம்பிக்கிறார். திருட்டில் ஈடுபடும் போது, எதிர்பாராதவிதமாக கொலைகள் நடக்கிறது. போலீசிடம் இருந்து தப்பிக்கும் நிலையில், நாயகி நிகிதாவை சந்திக்கிறார் கரு பழனியப்பன். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.



இந்நிலையில் கரு பழனியப்பனை போலீஸ் கைது செய்கிறது. தூக்கு தண்டனை விதிக்கப்படும் நிலையில், கரு பழனியப்பன் ஜெயிலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் கரு பழனியப்பன் ஜெயிலில் இருந்து தப்பித்தாரா? காதலி நிகிதாவுடன் இணைந்து வாழ்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கரு.பழனியப்பன், முகபாவனைகள் ஏதும் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகியாக வரும் நிகிதா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நமோ நாராயணின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சவுந்தரராஜா, அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் மாயாவின் எதிர்பாராத நடிப்பு மிரள வைக்கிறது.



எண்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான கதையை திரைக்கதையாக்கி இயக்கி இருக்கிறார் சந்திரா தங்கராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். இரண்டாம் பாதியில் வரும் திருப்பம் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது.

கே இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீஸ்வரன் ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘கள்ளன்’ ரசிக்கலாம்.

Similar News