தரவரிசை
விமர்சனம்

ராதே ஷ்யாம் விமர்சனம்

Published On 2022-03-11 16:28 IST   |   Update On 2022-03-11 16:28:00 IST
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் ராதே ஷ்யாம் படத்தின் விமர்சனம்.
கைரேகை நிபுணரான கதாநாயகன் (பிரபாஸ்) தன்னுடைய குடும்பத்துடன் ரோம் நகரில் வாழ்ந்து வருகிறார். கைரேகையை துள்ளியமாக கனித்து இவர் சொல்லும் விஷயங்கள் அப்படியே நடக்கிறது. தன் கைரேகையில் காதலுக்கான வாய்ப்பு இல்லாததால், காதல் வேண்டாம் என்று ஊர் சுற்றி திரியும் இளைஞனாகவும், பெண்களுடன் காதல் உறவுக்கொள்ளாமல் வெறும் சந்தோஷத்திற்காக சுற்றி திரியும் நபராகவும் காலத்தை கடத்தி வருகிறார். 

இந்நிலையில், மருத்துவராக இருக்கும் கதாநாயகி பூஜா ஹெக்டேவை சந்திக்கிறார் பிரபாஸ். இருவரும் பழகிவர எதிர்பாராதவிதமாக பூஜாவின் கைரேகையை பார்த்து அவரை பற்றி தெரிந்துக் கொள்கிறார். இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது. தன் வாழ்க்கையில் காதல் நடக்காது என்று நம்பி வந்த பிரபாஸுக்கு பூஜா ஹெக்டேவுடனான காதல் கைகூடியதா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.



முழுக்க முழுக்க காதல் படம் என்பதால் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் அவர்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். கதைக்கு தேவையான விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு அதனை சரியாக இவர்களின் நடிப்பு மூலம் வெளிபடுத்தியுள்ளனர். இக்கதைக்கு சரியான தேர்வாக இருவரும் ஜொலிக்கிறார்கள். சத்யராஜ் அவருடைய முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கதைக்குள் ரசிகர்களை புகுத்திவிடுகிறார்.

கதையின் தேர்வும் கதைக்கான திரைக்கதையும் சிறப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார். கடந்த காலத்தில் நடக்கும் கதை என்பதால் அதற்கான வடிவமைப்பை அழகாக படமாக்கியுள்ளார். இயக்குனரின் கதாப்பாத்திர தேர்வு கச்சிதமாக அமைந்துள்ளது. 



மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமளித்திருக்கிறார். சிறப்பான காட்சியமைப்பின் மூலம் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் மனதில் பதியும்படி அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் செல்லும் உணர்வை உருவாக்கியுள்ளார்.

தமனின் பின்னணி இசையும் ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. படத்திற்கு ஏற்றவாறு அந்த கதைக்கு தேவைப்பட்டவாறு இசையை கச்சிதமாக உருவாக்கியுள்ளனர்.

மொத்தத்தில் ‘ராதே ஷ்யாம்’ பிரம்மாண்ட காதல்.

Similar News