தரவரிசை
விமர்சனம்

அன்சார்டட் விமர்சனம்

Published On 2022-02-22 18:56 IST   |   Update On 2022-02-22 18:56:00 IST
டாம் ஹாலண்ட், மார்க் வால்ல்பெர்க் நடிப்பில் ரூபன் பிளீஷர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் அன்சார்டட் படத்தின் விமர்சனம்.
மெஜல்லன் கடற்பயணம் குறித்த மேப் ஒன்றைத் திருட முற்படும்போது டிரேக் சகோதரர்கள் இருவரும்
மாட்டிக் கொள்கிறார்கள். காவல்துறையிடம் இருந்து தப்பிக்க, மூத்த சகோதரன் சாம் டிரேக் தன் 10 வயது சகோதரான நாதன் டிரேக்கைப் பிரிந்து செல்ல நேருகிறது.

15 வருடங்கள் கழித்து, பார்டெண்டராக வேலை செய்யும் தம்பி நாதனுக்கு, சாமின் நண்பர் விக்டர் சல்லிவன் அறிமுகமாகிறார். இவர்கள் சாம் டிரெக் விட்டுச் சென்ற மெஜ்ஜலன் கடற்பயணத்தின் புதையலைத் தேடும் சாகசப் பயணத்தை மேற்கொள்ள நினைக்கிறார்கள். இருவரும் தங்களின் சாகசத்தைத் தொடங்க, இவர்களுடன் தோழி க்ளோயி சேர்ந்து கொள்ள, இந்த பயணம் மிகப்பெரும் அட்வென்சராக மாறுகிறது. 



இந்த அட்வென்சர் பயணத்தில் பல சிக்கல்களும், போராட்டங்களும் நடக்கிறது. இறுதியில் இந்த அட்வென்சர் பயணம் என்ன ஆனது? புதையலை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஸ்பைடர்மேன் நடித்த டாம் ஹாலண்ட் இப்படத்தில் கொஞ்சம் சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார். காமெடி டிபார்ட்மென்ட்டைக் கூட சீனியரான மார்க் வால்பெர்க்கிற்குத் தாரை வார்த்துவிட்டு நாதன் டிரேக்காக கதாபாத்திரத்தில் பொருந்திப் போயிருக்கிறார். ஆனால், பல இடங்களில் ஸ்பைடர்மேனைத்தான் அவர் நியாபகப்படுத்துகிறார்.

முதல் பாதி டிராமா கலகலவென நகர்கிறது. சோபியா அலியின் கதாப்பாத்திரம் பாத்திரம் திரைக்கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது. டூம்ப் ரெய்டர், அசாசின்ஸ் க்ரீட், பிரின்ஸ் ஆஃப் பெர்சியா, ரெசிடன்ட் ஈவில், ஹிட்மேன் உலக வரிசையில் மற்றுமொரு உலகப் புகழ்பெற்ற ‘அன்சார்டட்’ (Uncharted) வீடியோ கேமை திரைப்படமாக மாற்றியிருக்கிறார்கள்.



நாட்டி டாக் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கேமை ஒரு சாகசப் படமாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் ‘ஜோம்பி லேண்ட்’ படப்புகழ் இயக்குநர் ரூபன் பிளீஷர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இரண்டாம் பாதியை க்ளூக்களை வைத்துப் புதையலைக் கண்டறியும் ஒரு கேம் போலவே வடிவமைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘அன்சார்டட்’ அல்டிமேட்.

Similar News