தரவரிசை
விமர்சனம்

மண் வாசனை - கடைசி விவசாயி விமர்சனம்

Published On 2022-02-11 13:49 IST   |   Update On 2022-02-11 13:49:00 IST
மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் கடைசி விவசாயி விமர்சனம்.
ஒரு மரத்தை குலதெய்வமாக கும்பிடும் குக்கிராமம், அது. அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி, மாயாண்டி. தனக்கு சொந்தமான நிலத்தை தானே உழுது விவசாயம் செய்கிறார். அவருடைய நிலத்தை கையகப்படுத்த இரண்டு பேர் பணத்தை காட்டி, ஆசை வார்த்தை பேசுகிறார்கள். 

அதற்கு மாயாண்டி மயங்காமல் விவசாயம் செய்வதில் உறுதியாக இருக்கிறார். ஆசை வார்த்தை பேசியவர்கள், மயில்களை கொன்று மாயாண்டியை பிரச்சினைக்குள் சிக்க வைக்கிறார்கள். பிரச்சினை கோர்ட்டுக்கு போகிறது. மாயாண்டி ஜெயிலில் அடைக்கப்படுகிறார். இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டாரா?, இல்லையா? என்பதே மீதிக்கதை.



மாயாண்டியாக நல்லாண்டி என்ற முதியவர் வாழ்ந்து இருக்கிறார். அவர் நடித்தது போலவே இல்லை. அவரை நடமாடவிட்டு படம் பிடித்தது போல் இருக்கிறது. அவர் தொடர்பான வசனங்களும், காட்சிகளும் இயல்பாக உள்ளன. பிரபல நகைச்சுவை நடிகர்கள் யாரும் இல்லாமலே வசன காட்சிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. கோர்ட்டில் வெள்ளந்தியாக அவர் பேசும்போது, சிரிக்கவும் வைக்கிறார். சிந்திக்கவும் தூண்டுகிறார்.

விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். கைகளில் துணிப்பைகளை தூக்க முடியாமல் தூக்கி வரும் பாதி மனநோயாளியாக அனுதாபத்தை சம்பாதிக்கிறார். அவருடைய முடிவு, எதிர்பாராதது.



யானைப்பாகனாக யோகி பாபு, மாஜிஸ்திரேட்டாக ரேய்ச்சல் ரெபேக்கா ஆகிய இருவரும் இதயம் கவர்ந்த இதர கதாபாத்திரங்கள். இந்தக் கதைக்கும் ஒரு கிளைமேக்ஸ் உண்டு என்று காட்டியிருப்பது சுவாரஸ்யம். மணிகண்டனே ஒளிப்பதிவு செய்திருப்பதால் இன்னும் அழகாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பல இடங்களில் பொருத்தமாக ஒலிக்கிறது. 

பல ஆண்டுகளாகப் பயிர்கள் மீது அமிலத்தை ஊற்றியிருப்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார் மணிகண்டன். இரண்டரை மணி நேரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் மணிகண்டன். இந்த கதைக்களத்தில் கிராமத்தின் நாடி நரம்புகளையெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் நுழைந்திருக்கிறது என்பதையும், ரசாயன உரங்களின் தாக்குதல் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘கடைசி விவசாயி’ உயிரோட்டம்.

Similar News