தரவரிசை
விமர்சனம்

தங்கை கொலைக்கு காரணமானவர்களை தேடும் அண்ணன் - வீரமே வாகை சூடும் விமர்சனம்

Published On 2022-02-04 14:31 IST   |   Update On 2022-02-04 23:54:00 IST
து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் விமர்சனம்.
நாயகன் விஷால் போலீஸ் எஸ்ஐ பதவிக்கு தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய அப்பா மாரிமுத்து போலீஸ் ஏட்டாக இருக்கிறார். விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரியில் படித்து வருகிறார்.

ரவீனாவை லோக்கல் ஏரியாவில் இருக்கும் ரவுடியின் தம்பி காதலிக்கிறார். ஆனால், ரவீனா அவருடைய காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் கோபமடையும் ரவுடியின் தம்பி ரவீனாவை மிரட்டி காதலை சொல்ல வைக்கிறார். இது விஷாலுக்கும், ரவுடிக்கும் தெரிந்து தம்பியை அசிங்க படுத்துகிறார்கள். 

இதனால், ரவீனாவை கடத்த முயற்சி செய்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக வேறொரு கும்பல் ரவீனாவை கடத்தி கொலை செய்து விடுகிறார்கள். இறுதியில் தங்கை ரவீனாவை கொலை செய்தவர்களை விஷால் கண்டு பிடித்தாரா? ரவீனாவை கொலை செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.



படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஷால் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். தங்கை பாசம், சமுதாயத்தின் மீது அக்கறை, சாமானிய மனிதனின் கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் டிம்பிள் ஹயாதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். வில்லன் பாபு ராஜ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மாரி முத்து. காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு.



சாமானிய மனிதனின் கோபத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் து.ப.சரவணன். வெவ்வேறு திசையில் செல்லும் மூன்று கிளை கதைகளை ஒன்றாக அமைத்து திரைக்கதை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் படத்திற்கு உண்டான அம்சங்களை வைத்தே படத்தை இயக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு பலம். பிற்பாதியில் யூகிக்கும் படியான காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்திற்கு பலவீனம்.

கவினின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

மொத்தத்தில் 'வீரமே வாகை சூடும்' வீரம் குறைவு.

Similar News