தரவரிசை
விமர்சனம்

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை விமர்சனம்

Published On 2021-12-31 12:05 IST   |   Update On 2021-12-31 12:05:00 IST
மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் ருத்ரா, சுபிக்‌ஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை படத்தின் விமர்சனம்.
கதாநாயகி ஸ்ருதி (சுபிக்‌ஷா) வானொலியில் பணிபுரிந்து வருகிறார். அச்சமயத்தில் இயற்கை ஒலிகளை பதிவு செய்ய அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதனை தேடி, ஒலி பதிவு செய்வதில் கைதேர்ந்தவரை தேடி செல்கிறார் நாயகி. அப்பொழுது கதாநாயகன் கதிர் (ருத்ரா) என்ற ஒலி வல்லுனரின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து ஒலி பதிவு செய்ய பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது. பதிவு செய்த ஒலிகளுக்கு பல விருதுகளும் அங்கிகாரமும் கிடைக்கிறது. பிறகு மீண்டும் அவர்களுக்கு மேளதாளங்களை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்க, இருவரும் பயணிக்கிறார்கள்.

இவர்கள் காதல் ஆரோக்கியமாக சென்று கொண்டிருக்கிற நேரத்தில் அமெரிக்கருடன் நெருங்கி பழகுகிறார் ஸ்ருதி. இது பிடிக்காத கதிர் சண்டையிட்டு ஸ்ருதியுடனான காதலை முறித்துவிடுகிறார். இறுதியில் இவர்கள் காதலில் இணைந்தார்களா? மேளதாளங்களை பதிவு செய்யும் பணியை முடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.



மலையாள திரைப்படத்தில் நடித்த ருத்ரா இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவருடைய நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருந்தாலும் சில இடங்களில் புதுமுக நாயகன் என்ற தோற்றம் வெளிப்படையாக தெரிகிறது. 

கடுகு, கோலி சோடா 2 போன்ற படங்களில் நடித்து அனைவருக்கும் அறிமுகமானவர் சுபிக்‌ஷா. இந்த படத்திலும் அவருடைய வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் இவருடைய நடிப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.



சிறிய கதையை வைத்துகொண்டு ஒரு முழு நீள திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன். கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம். சில இடங்களில் திரைக்கதை ரசிகர்களுக்கு தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

ஒளிப்பதிவு பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார் பிஜு விஸ்வநாத். ராஜேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. ஒலி சம்மந்தப்பட்ட படம் என்பதால், தனி கவனம் செலுத்தி ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ இனிக்கவில்லை.

Similar News