தரவரிசை
விமர்சனம்

அண்ணன் தம்பி பாசம் - ஆனந்தம் விளையாடும் வீடு விமர்சனம்

Published On 2021-12-24 18:19 IST   |   Update On 2021-12-24 18:19:00 IST
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சரவணன், சேரன், விக்னேஷ், சினேகன், சவுந்தரராஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் விமர்சனம்.
ஜோ மல்லூரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன், என நான்கு மகன்கள். சரவணனுக்கு கவுதம் கார்த்திக், வெண்பா என இரண்டு பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, சவுந்தரராஜா ஆகியோர் மகன்கள். 

சேரன் தனது அண்ணன் சரவணன் மீது அதிக பாசமாக இருக்கிறார். சரவணன் தனது மகள் வெண்பாவின் குழந்தை தங்கள் வீட்டில்தான் பிறக்க வேண்டும் என நினைக்கிறார். வீடு கட்டுவதற்காக அண்ணன் சரவணனுக்கு தனக்கு சொந்தமான வீட்டு மனையை கொடுக்கிறார் சேரன். 



இதற்கு சரவணன், வீட்டு மனை உன்னுடையது, வீடு கட்டும் செலவு என்னுடையது என்று சேரனிடம் கூறி முடிவு செய்து மொத்த குடும்பமும் ஒன்றாக வாழ முடிவு செய்கிறார்கள். இந்த வீட்டை கட்டுவதற்கு குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் வருகிறது. இறுதியில் பிரச்சனைகளை சமாளித்து அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தார்களா? வீட்டை கட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி. குடும்பத்தின் பாசப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். பல காட்சிகள் சீரியல் போல் உள்ளது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் ஓரளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். 



கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் ஆகிய மூன்று பேரும் படத்தின் கதாநாயகர்கள் என்றே சொல்லலாம். முழு கதையும் தாங்கி சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக சேரனின் நடிப்பு படத்திற்கு பலம். ஒரு பக்கம் பாசமான அண்ணன், மறுபக்கம் குடும்பத்தை பிரிக்கத் துடிக்கும் தம்பிகள் என பல்வேறு உணர்ச்சிகளை சாதாரணமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கவுதம் கார்த்திக் ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். 

தம்பியாக நடித்திருக்கும் சவுந்தரராஜாவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கமான தன்னுடைய ஸ்டைலில் வில்லத்தனம் செய்திருக்கிறார் டேனியல் பாலாஜி. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.



சித்துகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக சொந்தமுள்ள வாழ்க்கை என்ற பாடல் உணர்ச்சி பூர்வமாக உள்ளது. பாலபரணியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை எதார்த்தமாய் பதிவு செய்துள்ளது.

மொத்தத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆனந்தம் குறைவு.

Similar News