தரவரிசை
விமர்சனம்

கூலித் தொழிலாளியில் இருந்து முதலாளி - புஷ்பா விமர்சனம்

Published On 2021-12-18 20:06 IST   |   Update On 2021-12-18 20:06:00 IST
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் புஷ்பா படத்தின் விமர்சனம்.
செம்மரக் கடத்தல் கும்பல் தலைவரான அஜய் கோஷ்யுடன் வேலை செய்கிறார் நாயகன் அல்லு அர்ஜுன். செம்மரங்களை போலீசாருக்கு தெரியாமல் லாவகமாக கடத்திச் செல்லும் தைரியம் அல்லு அர்ஜுனுக்கு இருப்பதால், அவருக்கு பொறுப்புகளையும் பணத்தையும் கொடுக்கிறார் அஜய் கோஷ். 

ஒரு கட்டத்தில் அல்லு அர்ஜுனை பார்ட்னராகவும் சேர்த்துக் கொள்கிறார் அஜய் கோஷ். இதன் பிறகு அஜய் கோஷின் இன்னொரு பார்ட்னரான சுனிலால், அல்லு அர்ஜுனுக்கு சிக்கல் வருகிறது. இறுதியில், அந்த சிக்கலை அல்லு அர்ஜுன் எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் திரை முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார் அல்லு அர்ஜுன். தோளை ஒரு பக்கமாகச் சாய்த்து நடக்கும் மேனரிசம், பன்ச் வசனங்கள், தைரியம் என நடிப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார். நடனக் காட்சிகள், ஸ்டண்ட் காட்சிகள் ஆகியவற்றில் கவனிக்க வைத்திருக்கிறார். 

நாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்றொரு பக்கம் பாடல் காட்சியில் வந்து அசத்தி இருக்கிறார் சமந்தா. அஜய் கோஷ் மற்றும் சுனில் ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.



வழக்கமான கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுகுமார். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம், ரசிகர்களுக்கு ஏற்ற கமர்சியல் கலந்து கொடுத்து இயக்கி இருக்கிறார். 2ஆம் பாகம் இருப்பதால் வேண்டுமென்றே திரைக்கதையின் நீளத்தை வைத்ததுபோல் இருக்கிறது. 

கேங்க்ஸ்டர் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் மிரோஸ்லா கூபா. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘புஷ்பா’ சரவெடி.

Similar News