தரவரிசை
விமர்சனம்

வில்லன்களை அழிக்கும் ஸ்பைடர்மேன்கள் - ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் விமர்சனம்

Published On 2021-12-17 18:41 IST   |   Update On 2021-12-17 18:41:00 IST
ஜோன் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜென்டயா, பெனிடிக்ட் கம்பர்பேட்ச் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் விமர்சனம்.
கடந்த பாகம் ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் முடிந்த இடத்திலிருந்து படத்தின் கதை ஆரம்பிக்கிறது. பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர் மேன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இதனால் பீட்டர் பார்க்கரும் அவன் நண்பர்களும் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில்கூட இடம் கிடைக்கவில்லை. இதனால், தான் ஸ்பைடர் மேன் என்பதை ஒட்டுமொத்த உலகமும் மறந்துவிடும்படி செய்ய டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் உதவி கேட்கிறான் பீட்டர் பார்க்கர்.

அந்த முயற்சியில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சனையில், பல்வேறு பிரபஞ்சங்கள் திறந்துகொள்கின்றன. அங்கிருந்து பழைய வில்லன்கள் இந்த உலகிற்கு வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். டாக்டர் ஸ்ட்ரேஞ் உதவியுடன் ஸ்பைடர் மேன் அவர்களை அழிக்க நினைக்கிறான். இறுதியில் ஸ்பைடர் மேன் எப்படி பழைய வில்லன்களை சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



இதற்குமுன் வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் மிக விறுவிறுப்பான திரைப்படம் இது என்றே சொல்லலாம். முந்தைய பாகங்களில் உள்ள கதைகளின் சாயல் இல்லாமல், புதுவிதமான பாணியில் இயக்குனர் ஜோன் வாட்ஸ் கதையை உருவாக்கியது பாராட்டுக்குரியது. 

அதிரடி காட்சிகளோடு துவங்கும் படம், ஆக்ஷன் காட்சிகள், நகைச்சுவை என்று விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சக்தி 'ஸ்பைடர் மேன்' படங்களுக்கு உண்டு. அதை 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறது.



படத்தில் டாக்டர் ஆக்டோபஸ், க்ரீன் காப்லின், மணல் மனிதன், மின்சார மனிதன், பல்லி மனிதன் வில்லன்களும், ஸ்பைடர் மேன்களும், ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்துக்க முடியாதளவிற்கு திரையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 

நடிகர்கள், கிராபிக்ஸ் காட்சிகள், பின்னணி இசை எல்லாம் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருப்பதால், இந்த வருடத்தின் சிறந்த சூப்பர் ஹீரோ படம் என்றுகூட இந்தப் படத்தைச் சொல்லலாம்.

மொத்தத்தில் ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’ சிறப்பு.

Similar News