சினிமா
என் காதலி சீன் போடுறா

சீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்

Published On 2019-09-16 09:12 GMT   |   Update On 2019-09-16 09:12 GMT
அங்காடித்தெரு மகேஷ், ஷாலு, மனோபாலா, ஆடுகளம் நரேன் நடிப்பில் ராம் சேவா இயக்கத்தில் வெளியாகி உள்ள ’என் காதலி சீன் போடுறா’ படத்தின் விமர்சனம்.
அப்பா, அம்மா இல்லாத மகேஷுக்கு அண்ணன், அண்ணி தான் ஒரே ஆறுதல். தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் ஷாலுவை காதலிக்கிறார் மகேஷ். ஆனால் வீட்டின் செல்லப்பிள்ளையான ஷாலு மிகவும் கோபக்காரர். மகேஷை கண்டு கொள்ளாமல் ‘சீன்’ போடுகிறார். மகேஷ் போராடி ஷாலுவை கரெக்ட் செய்கிறார். 

அந்த நேரம் பார்த்து மகேஷ் அண்ணன் மீது முன்விரோதம் கொண்டிருக்கும் சக போலீஸ் அதிகாரி கோகுல் அறிமுகமாகிறார். மகேஷின் அண்ணனை பழி தீர்க்க வேண்டும் என துடிக்கிறார். இந்த நிலையில் மகேஷ் - ஷாலு நிச்சயதார்த்தம் ஒரு கோவிலில் நடக்கிறது. அந்த சமயத்தில் மகேஷின் அண்ணி மர்மமாக கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? கோகுலுக்கும், மகேஷ் அண்ணனுக்கும் இடையே உள்ள முன்விரோதம் என்ன? மகேஷ் - ஷாலு திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.



ஒரு சின்ன கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதை கமர்சியலாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்சேவா. முதல் பாதி படம் ஜாலியாக நகர்கிறது. இரண்டாம் பாதி படம் விறுவிறுப்பாக மாறிவிடுகிறது. கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம், ‘அங்காடி தெரு’ மகேஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். 

ஹீரோயின் ஷாலு அழகு பதுமை போல் வந்து போகிறார். வழக்கம் போல் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார் மனோபாலா. போலீஸ் அதிகாரி வேடத்துக்கு ஏற்றதுபோல பிட்டாக இருக்கிறார் கோகுல். ஆடுகளம் நரேன் உள்பட படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.



அம்ரீஷின் இசை தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். குறைந்த பட்ஜெட் படம் என்பதால், அளவான லைட்களை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கேமரா மேன். எடிட்டிங்கில் இன்னும் நிறைய வேலை செய்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘என் காதலி சீன் போடுறா’ காமெடியுடன் விறுவிறுப்பாக நகர்கிறது.
Tags:    

Similar News