அரசு பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் மனதில் விதைக்கிறார். தொடர்ந்து ஆசிரியர் பிரபாகரனின் அதிரடி நடவடிக்கையால், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் லெனின் வடமலை பாதிக்கப்படுகிறார்.
இதனால், ஆசிரியர் பிரபாகரனை பழிவாங்குவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் லெனின் வடமலை. இந்த நிலையில், பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியை மேஹாலி மீனாட்சியும், பிரபாகரனும் காதலிக்கிறார்கள். மேஹாலி மீனாட்சி ஏற்கனவே திருமணமானவராக இருக்கிறார்.
இறுதியில் திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனை காதலிப்பது ஏன்? வில்லன் லெனின் வடமலை, பிரபாகரனை பழி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபாகரன், கிராமத்து ஆசிரியர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் மேஹாலி மீனாட்சி, குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்து இருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மறைந்த டேனியல் பாலாஜியை நினைவுப்படுத்துகிறார். வில்லன் லெனின் வடமலையின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துகின் சே குவேரா, வியக்க வைக்கும் விதத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று நடிப்பில் மிரட்டுகிறார்.
இயக்கம்
சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லெனின் வடமலை. தற்போதைய காலக்கட்டத்தில், அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தாலும், இன்னமும் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசை
சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரின், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.
ரேட்டிங்- 2/5