இர்பான்
கார் மோதி பெண் பலியான சம்பவம்.. சிக்கலில் இருந்து தப்பிப்பாரா? இர்பான்
- யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) கார் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் பரிசோதனை முடிந்த பின்னர், காவல் நிலையத்தில் இருந்து இர்பானின் வாகனம் விடுவிக்கப்படும் என கூறப்படுகிறது.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி இரவு புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்த 55 வயதாகும் பத்மாவதி அவரது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
உயிரிழந்த பத்மாவதி - இர்பான்
அப்போது மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த இர்பானின் சொகுசு கார் பத்மாவதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில், காரை ஓட்டி வந்த இர்ஃபானின் உறவினர் அசாரூதின் மீது போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால், விபத்தின் போது யூடியூபர் இர்ஃபானும், அவரது மனைவியும் காரில் இருந்தது தெரியவந்தது. இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட இர்பானின் சொகுசு காரை, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டது.
இர்பான்
இந்நிலையில், முறையான ஆவணங்களை போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஒப்படைக்காததால், இர்பானின் சொகுசு கார் மீண்டும் காவல் நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) கார் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் பரிசோதனை முடிந்த பின்னர், காவல் நிலையத்தில் இருந்து இர்பானின் வாகனம் விடுவிக்கப்படும் என கூறப்படுகிறது.