சினிமா செய்திகள்

கானா சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய இசையமைப்பாளர் தமன்

Published On 2023-10-03 12:51 GMT   |   Update On 2023-10-03 12:51 GMT
  • சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
  • சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி இசைத்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசைத்திறமையுள்ள பலரின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.



இந்நிகழ்ச்சியில் சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வார எபிசோடிலும் பல அற்புதமான தருணங்கள் நிகழ்ந்து வருகின்றன. நிகழ்ச்சியின் தொடக்க வாரத்தில், பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.



எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், கலர்வெடி கோகுல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார் இசையமைப்பாளர் தமன்.


நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்னதாகவே தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் தமன். கலர் வெடி கோகுலை விமானத்தில் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு படத்திற்காக வாய்ஸ் டெஸ்ட் எடுத்துள்ளார். மேலும் கலர் வெடி கோகுலுக்கு முதல் சம்பளத்தை தந்து அசத்தியுள்ளார். கலர் வெடி கோகுல் பாடப்போகும் பாடல், படம் மற்றும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் விவரங்கள் பின் வரும் வார நிகழ்ச்சிகளில் வெளியிடப்படவுள்ளது.

தமன் 'இது கலர் வெடி கோகுலின் திறமைக்குக் கிடைத்த பரிசென்றும் அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்வார்' என்றும் பாராட்டினார். நிகழ்ச்சி முடிவடையும் முன்னர் கலர் வெடி கோகுல் சினிமா பாடகராக மாறியது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, போட்டியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளது.

Tags:    

Similar News