சொசைட்டி பாவங்கள்... கோபி, சுதாகரின் 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது போலீசில் புகார்
- பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
- நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.
அதே சமயம் இந்த் வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.