சினிமா செய்திகள்

அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்! - இட்லி கடை குறித்து அவரது ஸ்டைலில் பார்த்திபன் சொன்ன அப்டேட்

Published On 2025-08-16 11:07 IST   |   Update On 2025-08-16 11:07:00 IST
  • தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
  • இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் தெலுங்கு நடிகையான ஷாலினி பாண்டே தனுஷின் தங்கை கதாப்பாத்திரத்திலும் மற்றும் அருண் விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். அதற்கான டப்பிங் பணிகளை நேற்று முடித்துள்ளார் அப்போது தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவரது பாணியில் நக்கல் மற்றும் நய்யாண்டியுடன் சில வார்த்தைகளை கூறியுள்ளார்.

அதில் "இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய 'ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ' சூதாடி' இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ' இட்லி கடை'யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது.

இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு,எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால்(மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன்

இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்!!!" என பதிவிட்டுள்ளார்.

திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'இட்லி கடை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை என்ன சுகம் பாடலை படக்குழு வெளியிட்டது அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Tags:    

Similar News