சினிமா செய்திகள்

ரோபோ சங்கர் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி

Published On 2025-09-19 10:51 IST   |   Update On 2025-09-19 10:51:00 IST
  • ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
  • ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், பின்னாளில் 'தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வந்தார். 'மாரி', 'விசுவாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.

'அம்பி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு வர காத்திருந்தது.

கட்டுமஸ்தான உடல் கொண்ட ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.

ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. 'வெண்டிலேட்டர்' கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் தாமு, தனுஷ், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ, கவிஞர் சினேகன், நடிகர் ராதாரவி, சிவகார்த்திகேயன், காளி வெங்கட், நடிகை நளினி, சின்னத்திரை நடிகர் தீபக் மற்றும் துணை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News