பள்ளி மற்றும் கல்லூரியில் காதல் தோல்விகளை சந்தித்த நாயகன் கிஷன் தாஸ், மேட்ரிமோனியல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு மேனேஜராக இருக்கும் நாயகி ஷிவாத்மிகாவுடன் சில சண்டைகள் போடுகிறார். பிறகு ஒரு கட்டத்தில் அவரையும் காதலிக்க ஆரம்பிக்கிறார். அவரோ காதலுக்கு ஓகே சொல்லும் நேரத்தில் சில காரணங்களால் பிரிகிறார்.
இறுதியில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? ஷிவாத்மிகா, கிஷன் தாசை விட்டு செல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கிஷன் தாஸ், பள்ளி மாணவன், கல்லுாரி மாணவன், வேலைக்கு செல்லும் இளைஞன் என மூன்று தோற்றங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
நாயகியாக நடித்திருக்கும் ஷிவாத்மிகா, துணிச்சலான பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். கோபம், பாசம், காதல் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நண்பராக நடித்து இருக்கும் ஹர்சத் கான் பல இடங்களில் சிரிக்க வைத்து இருக்கிறார். விடிவி கணேஷ் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். அம்மா பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சாரங் தியாகு. இயக்குனர் கவுதம் மேனனின் உதவியாளராக பணியாற்றியதால் அவருடைய சாயல் ஆங்காங்கே தெரிகிறது.
சிலம்பரசனின் பின்னணி குரல் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. காதலை தேடி போக முடியாது... கொடுக்க தான் முடியும்... நீ எப்போ கொடுக்குற இடத்துல இருக்கியோ... காதல் உன்னை தேடி வரும்... அதுதான் காதல்... என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர். காதல் காட்சிகள் அழுத்தம் இல்லாதது வருத்தம். மேட்ரிமோனியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் வருவதை குறைத்து இருக்கலாம். பிரிவதற்கான காரணம் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.
இசை
சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.