திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி!
- நடிகை துளசி பண்ணையாரும், பத்மினியும் படத்தின்மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
- ஷீரடி சாய்பாபாவுடன் நிம்மதியான பயணத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்
பழம்பெரும் நடிகை துளசி திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ஷீரடி சாய்பாபாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகை சாவித்ரி மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீதாலட்சுமி, சங்கராபரணம் ஆகிய படங்களுக்காக தெலுங்கு திரையுலகின் நந்தி விருதை இருமுறை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் வலம்வருகிறார்.
இவர் நடித்த படங்களில் டிஸ்கோ சிங், நல்லவனுக்கு நல்லவன், சகலகலா வல்லவன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். தற்போதையை தலைமுறையினருக்கு தெரியவேண்டுமானால் பண்ணையாரும் பத்மினியும் படத்தைக் கூறலாம். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகையாக இருக்கும் இவர் கன்னட நடிகர் சிவமணியை திருமணம் செய்துகொண்டார். கடந்த வாரம் வெளியான லவ் ஓடிபி படத்தில் நடித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
"டிசம்பர் 31 ம் தேதி எனது ஷீரடி தரிசனத்தின் தொடர்ச்சியாக, ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாதாவுடன் நிம்மதியாக தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி சாய்ராம்" என தெரிவித்துள்ளார்.