சினிமா செய்திகள்

நடிகை வின்சியிடம் தவறாக நடக்கவில்லை விசாரணையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ வாக்குமூலம்

Published On 2025-04-20 10:43 IST   |   Update On 2025-04-20 10:43:00 IST
  • நடிகர் அஜீத்தின் குட் பேட் அக்லி உள்பட பல தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஷைன் டாம் சாக்கோ.
  • கேரளாவில் பிரபலமான இவர், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வழக்கை சந்தித்து வருகிறார்.

நடிகர் அஜீத்தின் குட் பேட் அக்லி உள்பட பல தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. கேரளாவில் பிரபலமான இவர், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வழக்கை சந்தித்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சோதனைக்கு சென்ற போது, அங்கிருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான சி.சி.டி.வி. கேமரா பதிவுளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 3-வது மாடியில் இருந்து குதித்து அவர் தப்பித்தது ஏன்? என்பது தொடர்பாக விசாரிக்க போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

நடிகர் ஷைன் டாம் சாக்கோ தலைமறைவானதால் அவரது தந்தையிடம் போலீசார் சம்மனை வழங்கினர். இதனை தொடர்ந்து நேற்று காலை நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில்  ஆஜரானார். அவரிடம் போலீசார் ஓட்டலில் இருந்து தப்பி ஓடியது ஏன்? என்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். போதைப் பொருள் கும்பலுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் கேள்வி எழுப்பி னர்.

முதலில் தான் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என்று கூறிய அவர், போலீசார் பல்வேறு ஆதாரங்களை காண்பித்த பிறகு தனக்கு போதைப் பழக்கம் இருப்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் சம்பவத்தன்று ஓட்டலில் இருந்த போது போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும், தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என்ற பயத்திலேயே ஓட்டலில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் அவருக்கு போதைப்பொருள் வியாபாரி சஜீர் என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஷைன் டாம் சாக்கோவை கைது செய்தனர். தொடர்ந்து அறிவியல் பரிசோதனைக்காக அவரது தலைமுடி மற்றும் நகங்களை சேகரித்த போலீசார் பினனர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். மேலும் விசாரணைக்காக நாளை (21-ந் தேதி) காலை 10 மணிக்கு மீண்டும் ஆஜராக போலீசார் அறிவுறுத்தினர்.

இந்த விசாரணையின் போது நடிகை வின்சி அலோ சியஸ் புகார் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அந்த புகாரில் எந்த அடிப்படையும் இல்லை. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களே உண்மையை சொல்லட்டும். நான் படப்பிடிப்பு தளத்தில் நடிகையிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றார்.

Tags:    

Similar News