சினிமா
இளையராஜா

இசை ஜாம்பவான் இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள் - குவியும் வாழ்த்துக்கள்

Published On 2021-06-02 10:54 IST   |   Update On 2021-06-02 14:02:00 IST
இன்று தனது 78-வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
1976-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி வெளிவந்த ‘அன்னக்கிளி’ படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம் 44 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை இசையால் கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. திரைஇசையில் பல மாயாஜாலங்களை நிகழ்த்திய இளையராஜாவுக்கு இன்று 78-வது பிறந்த நாள். 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என அவர் பதித்த தடங்கள் ஏராளம்.

எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து, தன் இசையால் ஒவ்வொரு நொடியும் மக்களை தன்னிலை மறக்க வைப்பவர் இளையராஜா. உலகம் முழுவதிலும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்லலாம். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் இளையராஜா. 



இன்று உலகமே கொரோனாவால் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இத்தகைய கடினமான சூழலில் வீட்டிலேயே முடங்கி இருப்பவர்களுக்கு நிச்சயம் இவரின் பாடல்களும், இசையும் ஆறுதலாக அமைந்திருக்கும். இசை தெரிந்தவர்களும், இசையை ரசிக்கத் தெரிந்தவர்களும் இன்று இளையராஜாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Similar News