சினிமா
‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கும், படம் வெளியாக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. கடந்த 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது.
இதனிடையே இப்படம் மார்ச் 5-ந் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, ரிலீசுக்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் பேரில், இப்பட வெளியீட்டிற்கு நீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால், தற்போது படத்திற்கான தடை விலக்கப்பட்டுள்ளதாக படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: “ரேடியன்ஸ் மீடியா மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இடையேயான பிரச்சினை தீர்க்கப்பட்டது. தற்போது தான் நீதிமன்றம் தடை விலகலை வழங்கியது. இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கும், படம் வெளியாக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி. நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க,” என எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டுள்ளார்.