சினிமா
திரையரங்கம்

கொரோனா முடக்கத்தால் 85 சதவீதம் வசூல் வீழ்ச்சி.... இயல்பு நிலை திரும்பமுடியாமல் தத்தளிக்கும் தமிழ் சினிமா

Published On 2021-03-02 08:30 GMT   |   Update On 2021-03-02 10:43 GMT
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தும் கூட இன்னும் தமிழ் சினிமாவில் இயல்பு நிலை திரும்பவில்லை என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. பரவல் குறைந்த பிறகு பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவை பொறுத்தவரை மார்ச் மாதம் முதல் வாரத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் தான் திறக்கப்பட்டன. இதன் காரணமாக திரையுலகில் பெரிய நடிகர்கள், நடிகைகள் முதல் திரையரங்கு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மட்டும் தமிழ் சினிமா தனது வழக்கமான வசூலில் 85 சதவீதம் வரை இழந்துள்ளது. 2019-ம் ஆண்டு 5613 கோடி ரூபாயாக இருந்த தமிழ் சினிமா வசூல் 2020-ம் ஆண்டில் வெறும் 861 கோடியாக 85 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது 2018-ல் 4422 கோடியாக இருந்து 2019-ல் 30 சதவீதம் வரை உயர்ந்தது.

வழக்கமாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் 250-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும். 2019-ம் ஆண்டு மட்டும் 246 படங்கள் வெளியாகின. ஆனால் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெறும் 75 படங்களே வெளியாகின. பொது முடக்கத்துக்கு முன்பு 68 படங்களும் பொது முடக்கத்திற்கு பின்னர் 50 சதவீத இருக்கை அனுமதியின்போது 7 படங்களும் தான் வெளியாகின. பொது முடக்கத்துக்கு முன்பு 825 கோடியும் முடக்கத்துக்கு பின்னர் 36 கோடியும் வசூலாகி இருக்கிறது.



கடந்த ஆண்டு படங்களின் தயாரிப்பு, வெளியீடு இல்லாமல் போனதால் நிறுவனங்களும் செலவுகளை குறைத்தன. இதனால் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 403 கோடியாக இருந்த இழப்பு இரண்டாம் காலாண்டில் 288 கோடியாக குறைந்தது. திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்ட 3 வது காலாண்டில் 71 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின், தண்ணீர் உபயோகம் குறைந்தது, பணியாளர்களுக்கான சம்பளம் குறைப்பு போன்ற வற்றால் இழப்பு குறைந்தது.

திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தும் கூட இன்னும் தமிழ் சினிமாவில் இயல்பு நிலை திரும்பவில்லை. மாஸ்டர் படத்துக்கு முன்னும் பின்னும் வெளியான எந்த படமும் வெற்றியடையவில்லை. இதனால் படங்களை திரையரங்குகளில் வெளியிட தயங்கும் நிலையே நீடிக்கிறது.
Tags:    

Similar News