சினிமா
ஜாக்சன் ராஜ் - மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜின் சிஷ்யன் இயக்கும் புதிய படம்

Published On 2021-03-01 18:04 IST   |   Update On 2021-03-01 18:04:00 IST
பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை கொடுத்த மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜாக்சன் ராஜ், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். யுஎஸ் ஃபுரூட்ஸ் சார்பில் தங்கதுரை தயாரிக்கும் புதிய படத்தை யுவன் சங்கர் ராஜாவின் படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றிய அல்ரூபியான் இசையமைக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் ஜாக்சன் ராஜ் கூறும்போது, “நாயகன் ஏ.கே.ஆனந்த், நாயகி ஜெஸ்சி என இந்தப்படத்தில் நடிக்கும் அனைவருமே திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த புதுமுகங்கள் தான். பரியேறும் பெருமாள் படத்தில் பணியாற்றியபோதே ஆடிஷனில் கவனம் செலுத்த பயிற்சி கொடுத்திருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதனால் என்னுடைய படத்தில் கதாபாத்திர தேர்வுக்கு அது ரொம்பவே உதவியாக இருந்தது.



ஒரு அனாதை இளைஞனின் பாசபோராட்டம் கலந்த வாழ்க்கை தான் இந்தப்படத்தின் கதை. எந்த ஊராக இருந்தால் என்ன, எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படம் போல இந்தப்படமும் பார்வையாளர்களிடம் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

இந்தப்படத்திற்காக கலவரம் நடப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்க திட்டமிட்டோம். ஆனால் அதுவரை அன்பாக பழகி ஆதரவு அளித்த மூன்று ஊர் மக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், மறுநாள் படப்பிடிப்பு நடக்குமோ நடக்காதோ என சந்தேகத்துடன் நாங்கள் சென்றபோது, எதிர்பாராமல் திரண்டு வந்த மூன்று ஊர் மக்களும், எங்களின் நோக்கத்தை புரிந்துகொண்டு, படப்பிடிப்பு நடத்த முழு ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க முடியாத அனுபவம்” என்கிறார் இயக்குனர் ஜாக்சன் ராஜ்.

Similar News