சினிமா
இளையராஜா

கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா

Published On 2020-12-28 07:50 GMT   |   Update On 2020-12-28 12:15 GMT
கடும் மன உளைச்சல் காரணமாக இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது. 

அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா புகார் செய்தார்.

இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார். அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.



அதைத் தொடர்ந்து இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்பது என்று முடிவு செய்தனர்.

இந்தநிலையில், இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை தந்த இளையராஜாவின் வக்கீல், ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள் குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தினார். அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா, தனது வருகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் தான் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த சில பொருட்கள் காணாமல் போயுள்ளதால் இளையராஜா வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இளையராஜா வக்கீல் தியாகராஜன் கூறுகையில், ‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன. அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இளையராஜா மிகவும் வருத்தத்தில் உள்ளார்’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News