சினிமா
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published On 2020-12-14 15:18 GMT   |   Update On 2020-12-14 15:18 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள் வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார்.



இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எனவே படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News