சினிமா
பி கிருஷ்ணமூர்த்தி

3 முறை தேசிய விருது வென்ற கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்

Published On 2020-12-14 12:52 IST   |   Update On 2020-12-14 12:52:00 IST
3 முறை தேசிய விருது வென்ற கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
தமிழில் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் பி.கிருஷ்ணமூர்த்தி. அதன்பின் பாலு மகேந்திராவின் ‘வண்ண வண்ண பூக்கள்’, பாரதிராஜாவின் ‘நாடோடி தென்றல்’, சுஹாசினியின் ‘இந்திரா’, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, பாலாவின் ‘நான் கடவுள்’உள்பட பல திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். அவற்றில் சிறந்த கலை இயக்குனருக்காக 3 முறையும், சிறந்த ஆடை வடிவமைப்புக்காக 2 முறையும் வென்றுள்ளார். குறிப்பாக தமிழில் தேவையானி நடிப்பில் வெளியான பாரதி படத்திற்காக இவர் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சிறந்த கலை இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகளை வென்றார்.



77 வயதாகும் இவர் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாரதிராஜா, “கலைத் துறையில் என் கண்களில் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தியின் மறைவு நம்ப முடியா ஒன்று. வாடி தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Similar News