சினிமா
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்

Published On 2020-10-22 07:00 GMT   |   Update On 2020-10-22 07:00 GMT
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் விஜய்சேதுபதிக்கு விடுத்த வேண்டுகோளில் 800 என்ற திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். அதை ஏற்று விஜய்சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார். இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து, நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார். 



இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இலங்கையைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய இலங்கை செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News