சினிமா
இந்தி தெரியாது போடா டி சர்ட்

கன்னடத்திலும் டிரெண்டான ‘இந்தி தெரியாது போடா’ டி சர்ட்... காரணம் இந்த நடிகர் தான்

Published On 2020-09-14 14:24 IST   |   Update On 2020-09-14 14:24:00 IST
தமிழ்நாட்டை தொடர்ந்து கன்னட திரையுலகிலும் இந்தி திணிப்புக்கு எதிரான பிரச்சாரம் வலுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் “இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன்“ என்ற வாசகம் இடம் பெற்றிருந்த டிசர்ட் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பல்வேறு நடிகர்கள், இளைஞர்கள், அந்த வாசகத்துடன் டிசர்ட் அணிந்து தங்களின் புகைப்படத்தை வெளியிட்டு மொழி உணர்வை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலடியாக பா.ஜனதாவினர் எனக்கு இந்தி தெரியும் போடா என்ற வாசகத்துடன் டிசர்ட் அணிந்து அது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இருதரப்புக்கும் ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்துள்ளது. 

இந்த நிலையில் கன்னட திரையுலகிலும் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் வலுத்துள்ளது. பிரகாஷ்ராஜ் இந்திக்கு எதிரான டி சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். கர்நாடக வரைபடத்துடன் கூடிய அந்த டி சர்ட்டில் இந்தியைத் திணிப்பதை எதிர்த்த வாசகம் இடம் பெற்றுள்ளது. என்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும். எனது கற்றுக் கொள்ளுதல் என்பது என்னுடைய விருப்பத்திற்குரியது. எனது வேர் மிகவும் ஆழமானது. எனது பெருமை எனது தாய்மொழி. இந்தியைத் திணிக்காதே என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜின் இந்த டுவிட் வைரலாகியுள்ளது.



கர்நாடகாவில் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் பலரும் இதை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்செய் ஆகியோரும் தங்களது டி சர்ட் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் இந்தி எதிர்ப்பு டி சர்ட் டிரண்ட் பரவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News